Friday, February 1, 2019

कबीर के दोहे கபீர் ஈரடிகள் -1 முதல் 50 வரை


 
         ஹிந்தியில்  பக்தி  காலத்தில்  ஞான மார்க்கம் 
 தோற்றுவித்தவர் கபீர் தாஸ் .
இறைவனை அடைய ஞானம் வேண்டும் .

ஹிந்தி இலக்கியத்தில் அவரை சொல்லின் சர்வாதிகாரி என்று

போற்றப்படுகிறார் .பிறப்பால் அந்தணர் . வளர்ப்பதால் முகலாயர் .

நெசவாளி. அவரது ஈரடிகளில் (தோஹைகளில் ) குருபக்தி ,இறைபக்தி ,இறைபக்தியின் உன்னத நிலை ,மூடநம்பிக்கைகளை நிந்தித்தல் ,
பக்தி ஆடம்பரமல்ல என்ற வழிகாட்டல் ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன.

  அவரின் சிறந்த ஈரடிகள் :--

I .குரு  மகிமை .

1.  குருவும் இறைவனும்  எதிரில் காட்சி அளித்தால் யாரை  வணங்குவது ?
 
     நான் முதலில் குருவை வணங்குவேன் .ஏனென்றால் குரு தன்  ஞானத்தால்

        இறைவனைக் காணும் வழிமுறைகளை நமக்கு காட்டுகிறார்.

குரு அருள் இன்றி இறை அருள் கிடைப்பது அரிது .

2.  இந்த உடல் விஷத்தன்மையால் நிரப்பப்பட்டுள்ளது.
அந்த விஷ எண்ணங்களை  அகற்றி
அமிர்தத்தின்  சுரங்கமாகத் திகழ்பவர்  குரு.
சிறந்த குருவை கிடைத்தால்   அரிய  விலைமதிப்பற்ற
உயிர் தலை கொடுத்தும்  அவரைப்பெறுவது  மிகவும் மலிவானது .

3. இந்த உலகின் நிலப்பரப்பு முழுவதும் வெள்ளைத் தாளாக மாற்றி ,
மரங்கள் அனைத்தும் எழுதுகோலாக மாற்றி ,
ஏழு கடல் களையும் எழுதும் மையாக மாற்றி எழுதினாலும்
உயர்ந்த குரு மகிமை எழுத போதுமானதாகாது.


II .சொல்லின் மகிமை :-

4. மனிதர்கள் கேட்பவர்களுக்குப் பிடித்த 
இனிய உயர்ந்த சொற்களைப்  பேசவேண்டும் .
இப்படிப்பட்ட இனிய மொழி கேட்பவர்களுக்கும்
பேசுபவர்களுக்கும்  சுகமும்  ஆனந்தமும் தரக்கூடியன .

5. இந்த நாக்கு மிகவும் பொல்லாதது.
விரும்பத்தகாத சொற்களைச்  சொல்லி பாதுகாப்பாக
வாயிக்குள் சென்றுவிடுகிறது . அதன் விளைவால் வாங்கும்
செருப்படி தலையில் விழுகிறது. கவனமாக சொற்களைக் கையாள வேண்டும்.

6. பேரிச்சம்பழமரங்கள்  போல்  உயர்ந்து வளர்வதால் பயனில்லை.

 வழிப்போக்கர்களுக்கு நிழல் இல்லை.பழங்களும்  மிக உயரத்தில்
பழுக்கின்றன. இப்படி உயர்ந்த மனிதர்களால் எவ்விதப் பயனும் இல்லை.

7.    நாம் எப்பொழுதும் நம்மைக்  கண்டிப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ளவேண்டும்.நம் வீட்டின் முற்றத்திலேயே கூட அவர்களைத்
தங்க வைக்கலாம்.அவர்கள் மூலம் நம் குறைகளை அறிந்து நிறை காணலாம்.

8. தீயவர்களையும்  கெட்டவர்களையும்  தேடிச் சென்றால்  எனக்கு தீயவர்கள் ஒருவருமே  கிடைக்கவில்லை. நான் என் மனதில் சிந்திக்கும்  போது
என்னைவிட தீயவர்கள் எவரும் இல்லை. இப்படி ஒவ்வொரும் தன்னையே நினைத்துத் திருந்தினால் உலகில் தீயவர்கள் காண்பதரிது.

9.  இறைவனை வழிபட மனத்தூய்மை வேண்டும். கையில் ஜெப  மாலை ,
 மனம் உலக ஆசைகள் ,கவர்ச்சிகள் என பத்து திக்குகளிலும் அலைபாய்ந்தால் அது ஜபம் கிடையாது, கடவுளின் பக்தி கிடையாது.
மாலையைச் சுற்றுவதை நிறுத்தி விட்டு மனம் சுற்றுவதை விடுத்து
இறைவனை ஜபிக்க வேண்டும்.

10. துன்பத்தில் அனைவரும் இறைவனைத் துதித்து ,சுகங்கள் கிடைத்தவுடன்
இறைவனைத்  துதிப்பதை விட்டு விடுகிறார்கள். இன்பத்திலும் இறைவனைத் துதித்தால்   இன்னலுக்கே  இடமில்லை.

11. மண் குயவனிடம் ,நீ இன்று என்னைப்  பிசைந்து அடித்து துன்புறுத்துகிறாய்.ஆனால்  உன் இறப்பு என்று ஒருநாள் வரும்.
அப்பொழுது உன்னை நான் அரிக்கும் காலம் வரும்.நீ பயனற்றுப் போய்விடுவாய்.

12.  மனித ஆசைகள் நீர்த்திவளைகள்  போன்றதாகும் .ஒரு நொடியில் வந்து ஒருநொடியில் இல்லாமல் போய்விடும். சிறந்த உயர்ந்த குரு கிடைத்தால் உலகின் மாய மோக இருள் அகன்றுவிடும்.

13.   சுற்றும் திருகைக்கற்களின் நடுவில் சிக்கும் தானியங்கள் படும் இன்னல்களும் உருமாற்றமும் கண்டு கபீர் வேதனைப்படுகிறார்.அவ்வாறே நாமும் இவ்வுலகம் என்ற இயற்கை என்ற திருக்கையில் சிக்கி வேதனைப்படுகிறோம்.

14. தோட்டக்காரன் வருகை கண்டு  மொட்டுக்கள் தங்களுக்குள் பேசின.
இன்று மலர்ந்த பூக்கள் பறிக்கப்பட்டுவிடும். நாளை நமது முறை வந்துவிடும். இவ்வுலகின் நிலையாமை குறித்து  கபீர் மொட்டுக்கள் மூலம் கூறுகிறார்.

15.நாளை செய்யும் வேலையை இன்றே செய். இன்று செய்யும் வேலையை இன்றே செய்.ஒருநொடியில் பிரளயம் வந்து அழிந்து விடுவோம்.
நம்மிடம் அதிகமான நேரமே இல்லை.

16. உன் கடவுள் உனக்குள்ளே ,பூவில் மணம் இருப்பதுபோல்.
 கஸ்தூரி மான் வயிற்றில் கஸ்தூரி மணம்  . ஆனால் அந்த மணம்  தன் வயிற்றில்  இருப்பதறியாமல்  மான் தன்  அறியாமையால் வெளியில் தேடித் திரியும். அதுபோல் அறியாத  மனிதர்கள் இறைவனைத்தேடி அலைவார்கள்.ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான்.

17. எள்ளில் எண்ணெய் இருப்பதுபோல் ,சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பு இருப்பதுபோல் உன் கடவுள் உனக்குள் இருக்கிறார். இறைவனை எழுப்ப முடிந்தால்  எழுப்பி அறிந்துகொள்.

18. இறக்கமுள்ள   இடத்தில்  அறம்  இருக்கும்.
     பேராசை உள்ள இடத்தில் பாவங்கள் இருக்கும்.
    கோவம் உள்ள இடத்தில் பேரழிவு இருக்கும்.
 மன்னிப்பு உள்ள இடத்தில்  இறைவன் வசிக்கிறான்.

19. அன்பில்லா  இடம் மயானத்திற்கு சமமானது.
  கொல்லனிடம் இருக்கு தோல் உயிரில்லாமல் காற்று இழுத்து வெளியிடுவதுபோல் அன்பில்லாதவன் உயிரற்ற  மிருகம் போன்றவன்.

20. தாமரை  தண்ணீரில் மலரும்.
நிலவு ஆகாயத்தில் இருக்கும்.
ஆனால்  நிலவின் பிம்பம் தண்ணீரில் தெரியும் போது
 இரண்டும் மிக அருகில் இருக்கும்.
அவ்வாறே கடவுளிடம் நீ உண்மையான பக்தியும் அன்பும்
 வைத்தால் இறைவன் உன்னருகில் வந்துவிடுவான் .

21. ஒரு சாதுவிடமோ அறிஞனிடமோ 
அவனின் ஜாதி பற்றி விசாரிக்காதே,
அவன் ஞானத்தை அறிந்துகொள்.
கத்தியைத்தான்  அதன் கூர்மை அறிந்து வாங்கவேண்டும்.
உரைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.

22. கோபமில்லா மனதில் குணம் இருக்கும்.
  மனம் குளிர்ந்து இருந்தால் எதிரிகள் இருக்கமாட்டார்கள்.
எல்லோரின் கிருபையும் கிட்டும்.

23. இன்றுவரை  நல்ல அறிஞர்களின் சேர்க்கையின்றி வாழ்க்கை கழிந்து விட்டது. அன்பும் பக்தியும் இன்றி மனிதன் மிருகத்திற்கு சமமானவன்.
பக்தனின் இதயத்தில் இறைவன் வாழ்வான். வாழ்கிறான்.

24, புனித ஸ்தலங்களுக்கு சென்றால் பலன் கிடைக்கிறது.
 ஆனால் நல்ல மஹான்களில்  சேர்க்கையால்
புண்ணியமும் ஞானமும் கிடைக்கின்றன.
ஆனால் நல்ல உயர்ந்த குரு கிடைத்தால்
பலவகையான ஞானமும் புண்ணியங்களும் கிடைக்கின்றன.

25. மனிதர்கள் தினந்தோறும் குளித்து உடலைத் தூய்மையாக
வைத்துக்கொள்கின்றனர். ஆனால்  மனத்தூய்மை இன்றி வாழ்கிறார்கள்.
ஆனால் மனத்தூய்மை உள்ள மனிதன் தான்  உண்மையான மனிதன்.

26. அன்பு என்பது தோட்டங்களில் விளையாது. அன்பு என்பது சந்தையில் விற்காது. அன்பு வேண்டுவோர்கள் கோபம் ,காமம்,ஆசை ,அச்சம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டும்.

27.சாதுக்களையும் சத்தியத்தையும்
பூஜிக்காத வீட்டில்
 பாவங்களே குடி கொள்ளும்.
அந்த வீடுகள் பகலிலும்
 பூத -பிரேதங்களை வாழும் மயானம் தான்.


28.  சாதுக்கள் முறம் போல் இருக்கவேண்டும்.
முறம் நல்லதை வைத்துக்கொண்டு
உமி தூசி போன்றவற்றை விட்டுவிடும்.
அப்படியே சாதுக்கள் தீயவைகளை விட்டு விட்டு
நல்லவைகளை மனதில் கொண்டு அறவழியிலேயே செல்வார்கள்.

29.  நல்ல நாட்கள் ,நல்லநேரம் வாய்ப்புகள் இருக்கும்போதே
  நாம் நம்  எண்ணங்களை செயல்களை புரிதல் வேண்டும்.
அறுவடையைத் தாமதமாக செய்ய  நினைத்து  பறவைகளுக்கு இறையானபின்  வருத்தப்படுவதால் எவ்வித பயனும் இல்லை.
காலத்தே பயிர் செய்யவேண்டும்.

30.  ஆணவம் இருக்கும் போது ஆண்டவன் நினைவில் இல்லை .
ஆணவம் சென்ற பின் ஆணவம் மனதில் இல்லை.
 நல்ல குரு  என்ற விளக்கு பெற்ற 
பின் மன  இருள் முற்றிலும் போய் விட்டது.

31. தினந்தோறும் குளித்தாலும் ,மனதில் உள்ள
அழுக்கான எண்ணங்கள்  இருந்தால் ,
குளிப்பதால் பயன் இல்லை. மீன் எப்பொழுதும்
தண்ணீரில் இருந்தாலும் அதன் துர்நாற்றம் கழுவினாலும் போகாது.

32. கடவுளின் அன்பும் அருளும் ,மனதில் இறை அன்பு ,பக்தி
பெற வேண்டும் என்றால் ,     முக்கியபணியாக
ஆணவம் ,கோபம் ,பயம் ,ஆசைஆகியவற்றை
  விட்டுவிடுதலாகும்..

33. மனிதன் மற்றவர்களின்  மனவேதனை
 மற்றும் துன்பங்களை  புரிந்து கொள்ளவேண்டும் .
அப்படிப்பட்ட வான் தான் மனிதன் ,உயர்ந்த மனிதன்.
மற்றவர்கள் துன்பம் அறியா  மனிதன் மனிதனாக இருந்தும்
பயனில்லை.

34.  குருவின் மகிமை அறியாதவர்கள் குருடர்கள் ,முட்டாள்கள் .
கடவுள் உங்களிடம் கோபப்பட்டு விலகிச் சென்றால் குருவின் உதவி கிட்டும் ,
குரு சினந்துகொண்டால்  உலகில் உங்களுக்கு யாருமே உதவமாட்டார்கள்.

35.  நீ எப்பொழுதும் தூங்கிக்கொண்டிருக்கிறாய்.
சற்றே விழித்துக்கொள் .கடவுளின் மேல்
அன்பையும் பக்தியையும் செலுத்து.
இல்லை என்றால் உனக்கு நிரந்தர தூக்கம் ,
அதாவது  மரணம் வந்துவிடும்.

36. நிலவும் குளிரல்ல ,பனிக்கட்டியும்  குளிரல்ல.
உயர்ந்த மனிதர்கள் மனதால்  எல்லோரையும் குளிரவைப்பார்கள்.
எல்லோரையும் நேசிப்பார்கள்.

37.   நூல்கள் பல படிப்பதால் ,ஒருவரும் பண்டிதவராவதில்லை.
அன்பு என்ற இரண்டரை எழுத்தை அறிந்து புரிந்து தெரிந்தவர்கள்
பண்டிதர்களே இல்லை.

38 மரணம்  நெருங்கும்  போது
ராமதூதர்கள் அழைப்பு வரும்போது
கபீர்தாசர்  மிகவும்  வருத்தப்பட்டார்.
ஏனென்றால் சாதுக்கள் ,உயர்ந்தவர்கள்
சாத்துமஹாத்மாக்களுடன் சேர்ந்திருக்கும் ஆனந்தம்
சுவர்க்கத்திலும்  இருக்காது.

39 .உலகில் அமைதியும் குணமும்
 ரத்தினங்களை விட  மிக உயர்ந்தது.
நற்பணப்பிற்கும் மூவுலக  செல்வமும் இரத்தினத்திற்கு
இணையாகாது.

40.    இறைவா !எனக்கு அதிகம் தேவை இல்லை.
எனக்கும் ,என் குடும்பபத்திற்கும்
என் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் ,சாதுக்கள் போன்றவர்களுக்குத் தேவையான  போதுமான செல்வம் பசிப்பிணி போக்கும் அளவிற்கு அளித்தால் போதும்.

41. ஈ  முதலில் வெல்லத்தில்  ஒட்டிக்கொண்டிருக்கும் .
தன்   இறக்கைகளை   வெல்லத்தில்  ஒட்டிக்கொண்டிருக்கும் .
அப்பொழுது அது பறக்க முயற்சிக்கும் .பறக்க முடியாது.
அது வருத்தப்படும் .
அவ்வாறே  மனிதன் உலகியல் சுகங்களில்
இணைத்துப்  பிணைத்து வாழ்கிறான் .
இறுதிக்காலத்தில் மிகவும் வருத்தப்படுகிறான் .

42.  மறுபிறவியில் இருந்து விடுபட ஞானம்
பெற முயற்சிக்க வேண்டும்.
இந்த உலகம் வெறும் மண் தான்.
ஞானம் பெறவேண்டும்  இல்லை என்றால்
 மீண்டும் மீண்டும் இந்த மண்ணுலகில் பிறந்து
இன்னலுறவேண்டியிருக்கும்.

43. கசப்பான சொல் தான் எல்லாவற்றிலும் தீய செயல்.
மஹான்கள்  சாதுக்களின் சொற்கள் ,நீர் போன்று அமிர்த
மழை  பொழியும்.

44.  உயர்ந்த குலத்தில்   பிறந்து செயல்கள்
 உயர்ந்த செயல்கள் இல்லை  என்றால்,
அது விஷம் நிறைந்த பொற்கலசத்திற்கு சமமாகும் .
நாலா பக்கத்தில் இருந்தும்  வரும் நிந்தனைக்கு சமமாகும்.

45. இரவைதூங்கி கழிக்கின்றோம் ,பகலை உண்டு கழிக்கின்றோம்.
வைரம் போன்ற மதிப்புள்ள வாழ்க்கையை செல்லாக்காசாக்கியுள்ளோம் .
வாழும்  வாழ்க்கையைப் பயன்டுத்தள்ளதாக்கவேண்டும்.

46.  காமம் ,கோபம் ,பேராசை இந்த நான்கும் குடி கொண்டால் பக்தி செய்ய முடியாது. தன்  ஜாதி ,குலம் ,ஆணவம் ஆகியவற்றை தியாகம் செய்தவர்கள் தான்  பக்தியில் மூழ்கும் வீரனாவான்.

47.  காகம்  செல்வம் திருடுவதில்லை.இருப்பினும் யாருக்கும் பிடிப்பதில்லை.
குயில் ஒருவருக்கும் பணம் தருவதில்லை . ஆனால் எல்லோருக்கும் பிடிக்கிறது. இந்த வேறுபாடு  குயிலின் இனிமையான குரலால் தான் இந்த வேறுபாடு.இனிமையான குரலால் அனைவரையும் கவரலாம் என்பதற்கு காகமும் குயிலும் தான் காரணம்.

48. இந்த உலகம் அறிவால்  நிறைந்துள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் கடவுள் இருக்கிறார்.
அறிவைப் பெற்றுக்கொள்.பக்தியை ஏற்றுக்கொள்.
இல்லை என்றால் இறுதித் தருணத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

49. காலுக்குக்கீழ் இருக்கும் தூசி என்று நிந்திக்காதீர்கள்.
காற்றில் பறந்து அது கண்களில் விழுந்தால் மிகவும் உறுத்தும் .
வலியும்  ஏற்படும்.  அவ்வாறே எளியோரை நிந்திக்கக் கூடாது.

50.  அனைத்து செயல்களும் மெதுவாக காலத்தால் கனிந்து வரும்.
 அவசரப்பட்டு எந்தக் காரியமும் நடைபெறாது.
தோட்டக்காரன் நூறு குடம்  தண்ணீர் ஊற்றினாலும்
உரிய பருவகாலத்தில் தான் பலன் கிடைக்கும்.












   





No comments:

Post a Comment